Saturday, May 15, 2010

தேசம் விட்டு... தேசம் சென்று.

தேசம் விட்டு... தேசம் சென்று...
சிறிது வெளிச்சம்!

யுத்தம் என்பது ஒரு சொல் அல்ல; அது ஒரு சிதைவியக்கம்!

மனிதர்களை இருப்பிடத்தில் இருந்து பிடுங்கி வீசி, சொந்தபந்தங்களைக் காவு வாங்கிய கொடுங்காற்று. யுத்தம் நின்றாலும் அதன் அலைக்கழிப்புகள், மீளாத துயரம். அது தலைமுறைகளைத் துரத்திக்கொண்டே இருக்கும் துர் கனவு.

வரைபடத்தில் மட்டுமே பெரும்பான்மை நாடுகளை வேடிக்கை பார்க்கும் நம்மில், பெரும்பாலானோருக்கு எல்லை கடத்தல் என்பது எவ்வளவு சிக்கலானது என்று புரியாது. இலங்கைத் தமிழ் மக்கள் அதன் வேதனையை முழுமையாக அறிந்தவர்கள்.
முறையான பாஸ்போர்ட், விசா எதுவும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே உந்துதலால் வேறு பெயர்களில், வேறு அடையாளங்களில், ஏதாவது ஒரு தேசத்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்று அவதியுறும் தாய் மண்ணை இழந்த மக்கள், உலகம் எங்கும் பரவி இருக்கிறார்கள்.

'The beautiful country' என்ற வியட்நாமியப் படம் பார்த்தேன். பினா என்ற பதின்வயதுப் பையன் தன்னைக் கிராமத்தில் விட்டுவிட்டு ஓடிப்போன தனது தாயைத் தேடிக் கிராமத்தில் இருந்து சிகோன் வருகிறான்.

அம்மா ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருக்கிறாள். அவளுக்கு இன்னோர் ஆளுடன் உறவு ஏற்பட்டு, ஒரு தம்பி இருப்பதைக் காண்கிறான். அம்மா தனது மகன் பினாவையும் தான் வேலை செய்யும் வீட்டிலே வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறாள். அங்கே ஒருநாள் கண்ணாடியால் ஆன புத்தர் சிலையை பினா உடைத்துவிடுகிறான். எஜமானி திட்டியபடியே அவனை அடிக்க வருகிறாள். ஆத்திரத்தில் அவளை பினா தள்ளிவிடுகிறான். அவள் இறந்துவிடுகிறாள்.

சிறைக்குப் பயந்து தனது இரண்டு பிள்ளைகளையும் அமெரிக்காவுக்கு ஓடிவிடும்படியாகப் பணம் தந்து அனுப்பி வைக்கிறாள் அம்மா. கள்ளப் படகு ஒன்றில் ஏறுகிறார்கள். பிறகு இன்னொரு கப்பல். அங்கே பணம் வசூலிக்கப்படு கிறது. பினா போல நூறு பேர் முறையான அனுமதி இன்றி அமெரிக்கப் பயணம் போகிறார்கள். கப்பலில் அவமதிப்புகள் தொடர்கின்றன. புயல் கப்பலைத் தாக்குகிறது. கப்பல் அதிகாரி அவர்களைப் புழு பூச்சிபோல நடத்துகிறார்.

கப்பல் திசை மாறி அவர்களை மலேசியாவில் இறக்கிவிடுகிறது. அங்கே பிடிபட்டு அகதி முகாமுக்குக் கொண்டுபோகப்படுகிறார்கள். நெருக்கடியான வாழ்க்கை. பசி தாங்க முடியவில்லை. அகதி முகாமில் ஒரு வேசை அவர்களுக்கு உதவி செய்கிறாள். அவள் வழியாகப் பணம் சேகரித்து அமெரிக்கா கிளம்புகிறார்கள். அமெரிக்க மண்ணில் மறுபடி பிடிபடுகிறார் கள். அவர்களை ஓர் ஆள் கொத் தடிமையாக விலைக்கு வாங்கி வேலைக்கு அனுப்புகிறான். அவனது கடன் தீரும் மட்டும் வேறு எங்கும் போக முடியாது. முடிவில் பினா மட்டும் குடியுரிமைக்கு அனுமதிக்கப்படுகிறான். அப்போது அவன் தனது தம்பிக்காக அதை மறுத்துவிடுகிறான்.

படம் பார்த்துக்கொண்டு இருக்கையில், ஈழத் தமிழ் மக்கள் கடல் கடந்து சென்ற நிகழ்வுகள் மனதைத் துவளச்செய்தன. எவ்வளவு பேர், எத்தனை சிரமங்களுடன் நாடு கடந்து, புகலிடம் தேடிப் போயிருக்கிறார்கள். அவற்றை அகதிகள் என்ற ஒற்றைச் சொல் வழியாக, எவ்வளவு சுலபமாக நாம் கடந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உருவானது.

இலங்கைத் தமிழ் மக்கள் யாவர் மனதிலும் நீங்காத வலி ஒன்று உள்ளது. அது புகலிடம் தேடி அலைந்துபட்ட அவமானங்கள், அனுபவங்களின் நினைவுகள். அனுபவம் என்ற சொல் எவ்வளவு அழுத்தமற்றது என்பதை உணருவது இதுபோன்ற சூழலில்தான்.
முறையான நுழைவு உரிமை இன்றி விமான நிலையங்களில் பிடிபட்டவர்கள். கப்பல் ஏறிப் பசி தாகத்தோடு தப்பிப் பிழைத்துக் கரை கண்டபோதும், தன்னை ஒரு தேசமும் அனுமதிக்காது என்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள், எப்படியோ ஒரு தேசத்தினுள் நுழைந்துவிட்டோம் என்று ஆசுவாசம்கொண்டபோது, அங்கே குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், யாவர் கண்களிலும் மறைந்து நிழலாக ஒளிந்து வாழ்பவர்கள் என்று எத்தனை துயர அனுபவங்கள், அவல நிகழ்வுகள்.

பூமி, வரைபடத்தில் மட்டுமே பெரியதாக உள்ளது. மனிதர்கள் அதை எல்லைகளாலும், தடுப்புவேலிகளாலும் துண்டுகளாக்கி இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடு கடலின் மீதுகூட வரையப் பட்டுவிட்டது. ஆகாயம்கூட வான் எல்லைகளாகத் துண்டாடப்பட்டுவிட்டன. உலகம், மாபெரும் மிருகக்காட்சிச் சாலைபோல உருமாறி உள்ளது. நம் நூற்றாண்டின் மாபெரும் அவல நாடகங்களில் ஒன்று அகதி முகாம்.

ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். 17 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்ற அனுபவத்தை விவரித்துக்கொண்டு இருந்தார்.

'வீடு திரும்புதல் என்பது பல ஆண்டுகளாக மனதில் அடங்கியிருந்த ஆசை. ஊரைவிட்டுத் தப்பி ஓடிய இரவு அப்படியே மனதில் கலையாமல் இருக்கிறது. யுத்தம் உச்சநிலையை அடைந்துகொண்டு இருந்தது. நானும் என் தம்பியும் அம்மாவின் நகைகள், பொருட்களை விற்றுக் கிடைத்த பணத்தில் எப்படியாவது ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றுவிடலாம் என்று, தரகர்கள் வழியே கள்ளத்தனமாக நாட்டுப் படகில் கிளம்பினோம். நான் பாரீஸை நோக்கிப் பயணம் செய்தேன்.

பதுங்கிப் பதுங்கிச் சென்று பிரான்ஸில் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டேன். என்னை வரவேற்ற முதல் இடம், பிரெஞ்ச் சிறை. அங்கே என்னைப்போலவே பிடிபட்ட அகதிகள் சிலர் இருந்தார்கள். எங்களைத் திரும்ப நாட்டுக்கே அனுப்பப்போகிறார்கள் என்றார்கள். முட்டிக்கொண்டு வந்தது அழுகை. இதற்காகவா இத்தனை பாடு பட்டோம் என்று புலம்பினேன்.

அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நான் அங்கே வசிக்க அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தார்கள். அங்கிருந்து துரத்தப்பட்டேன். அடுத்த பயணம் கனடாவை நோக்கியது. ரகசியமாகப் பணம் சேகரிக்கப்பட்டு, மாற்று முயற்சிகள் வழியாக விமான நிலையம் வரை சென்று பிடிபட்டு மறுபடி சிறைபட்டேன்.

இப்படி 11 சிறைகள். ஆறு ஆண்டுகள் ஓர் இடம்விட்டு மறுஇடம் என்று அலைந்து, உடல் நசிந்து முடிவில் நார்வே சென்று சேர்ந்தேன். வீட்டில் இருந்து கிளம்பி இன்னொரு தேசத்தினை அடைவதற்கு எனக்கு இரண்டாயிரம் நாட்கள் ஆகியிருந்தன.

நானாவது உயிர் தப்பிப் புகலிடம் தேடிவிட்டேன். என்னோடு புறப்பட்ட என் தம்பி வழி மாறி ரஷ்யா சென்று, அங்கே அதிகாரிகளிடம் பிடிபட்டு சித்ரவதை செய்யப்பட்டு, அங்கிருந்து தப்பி ஆப்கானிஸ்தான் சென்று, அங்கு கைதியாகி, உடல்நிலை கெட்டு மரணம் அடைந்தான். அவன் உடலை உரிமைகொள்ளக்கூட எவரும் இல்லை. யார் என்ற எந்த அடையாளமும்இன்றி அவன் உடல் புதைக்கப்பட்டது. அப்போது அவன் வயது 23.

புகலிடம், அகதி முகாம், வீடு திரும்புதல், மறுவாழ்வு என்பதெல்லாம் உங்களுக்கு வெறும் வார்த்தைகளாக மட்டும்தான் தெரிந்திருக்கின்றன. அதை அனுபவித்துப்பாருங்கள் அப்போதுதான் அதன் நிஜமான வேதனை புரியக்கூடும்.

இன்னொரு தேசத்தில் வசிக்கிறோம் என்பது அடிமனதில் எப்போதும் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கியபடியேதான் இருக்கிறது. எவ்வளவுதான் இயல்பாக நடத்தப்பட்டாலும் யாரோ நம்மை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருப்பதுபோன்றும் அறியாத கண்கள் ரகசியமாகக் கண் காணிக்கின்றன எனவும் உள்ளுணர்வு நம்பிக் கொண்டே இருக்கிறது.

யுத்தம் முடிவுக்கு வந்தது. உடனே, ஊர் சென்று வர வேண்டும் என்ற வேட்கை தீவிரமானது. இனி அங்கே என்ன இருக்கிறது என்ற நிதர்சனம் தெரிந்தபோதும், மனது சாந்தம்கொள்ள மறுத்தது. சில வாரங்களில் பயண ஏற்பாடு செய்தேன். 17 வருடங்களுக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி எடுத்துவைக்கிறேன். மிகை உணர்ச்சி என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால், விமானம் தரை இறங்கி, சொந்த நாட்டுக்கு வந்துவிட்டோம் என்று உணரும்போது தொண்டை அடைத்துக்கொண்டது. ஒரு பக்கம் சந்தோஷம்... மறுபக்கம் ஆறாத வலி.

சொந்தக் கிராமம் செல்வதற்காகப் பேருந்தில் பயணச் சீட்டு வாங்கி ஏறி உட்கார்ந்தேன். பேருந்துச் சீட்டைக் கையில்வைத்துப் பார்த்தபடியே இருந்தேன். ஊர் பெயரை வாசிக்க வாசிக்க, என்னை அறியாமல் விம்மி அழுதேன்.

இன்று என் குடும்பத்தில் உயிரோடு எவரும் இல்லை. ஆனால், என்னை வளர்த்த ஊர், பெருகியோடும் ஆறு... பழம் கொடுத்த விருட்சங்கள், நடந்து திரிந்த சாலைகள், கற்றுத்தந்த பள்ளிக்கூடம் யாவும் சிதைந்து உருத்தெரியாமல் போயிருந்தன. எவரையும் சந்திக்கவோ, உரையாடவோ மனம் இல்லாமல் இரண்டு நாட்களில் ஐரோப்பா திரும்பி விட்டேன். ஊரில் இருந்து என்ன கொண்டுவந்தீர்கள் என்று கேட்ட மனைவிக்கு பேருந்தின் பயணச்சீட்டைக் காட்டினேன். அதிசயமான பொருளைக் காண்பதைப்போல அதைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். பின்பு, அவளாலும் அழுகையை அடக்க முடியவில்லை. ஐரோப்பிய நாட்டின் அத்தனை குளிரையும் மீறி, எங்கள் மனதில் ஊரைப் பிரிந்த நினைவு நெருப்பாக வாட்டிக்கொண்டு இருக்கிறது. அதை எந்த பனிப் பொழிவாலும் தணிக்க முடியவில்லை!'

பார்வை வெளிச்சம்!

10 கோடிக்கும் அதிகமான மக்கள் வேறு வேறு தேசங்களில் வாழ்வதாக ஐ.நா கணக்கெடுப்பு சொல்கிறது. உலக அகதிகள் தினமாக ஜூன் 20-ம் நாளைக் கொண்டாடுகிறது ஐ.நா சபை. இது முன்பு ஆப்பிரிக்க அகதிகள் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி ஒரு வார காலம் அகதிகள் வாழ்வின் இன்னல்கள் மற்றும் உரிமைகள் குறித்த கவனத்தைப் பொதுமக்களிடம் உருவாக்க விழாக்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன!

 

நன்றி
விகடன்

 

No comments:

Post a Comment