Sunday, May 16, 2010

துவேச துவசத்தின் திவசம்!

துவேச துவசத்தின் திவசம்!

 
ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ?
பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் !
 தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று 
இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது !
 
பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி
புழுவோடு போட்டி  போட்ட அந்த கேவலத்தை கண்டோமே !
பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று
இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே !
 
எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை !
இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் !
தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன்
எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் !
 
முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம்
கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக தமிழோடு இணைந்தது!
கள்ளி பால் கொடுத்து அவன் கொன்றழிக்க நினைத்த எங்கள்
தமிழீழ குழந்தை இன்று புலம் பெயர் இளையோர்  தத்தெடுத்தார்!
 
அங்கே கொன்றொழித்து நின்றவனை தூக்கி வைத்து ஆடினாரோ ?
சிங்களம் வெறியர் தாம் என்று உங்களுக்கு உணர்த்தி நின்றாரோ ?
ரத்தம் குடித்தவனை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தாரோ !
துட்டகைமுனு தொட்டு  இன்று வரை அவர் வெறி மாறவில்லை !
 
புரியலையோ உங்களுக்கு ? உணர்வு மரத்த சில தமிழ் அடிமையரே !
சுயநல பிறவிகளே ! கொஞ்சம் உணர்வை விதையும் உள்ளத்தில் !
கோசலம் கொஞ்சம் தந்து உம் கோவணத்தை உருவுகின்றான்!
நா சலம் ஒழுக வரிசையில் நிற்கின்றீர் "அடிமை" பட்டம் வாங்க !
 
சுயநலமற்ற அந்த தெய்வங்கள் முனையில் உமக்காய் காவல் நிற்க
சுயலத்தொடு வாழ்ந்த அதே மனித பிறவிகள் தானே நாங்கள் ?
இனியாவது  மாற வேண்டும் ! அடிமையல்ல நாங்கள் என்று கூறும்!
ஆண்ட பரம்பரை ! தோல்வியில் இருந்து மீண்ட பரம்பரை ஆகும் இனி!!
 
ஓராண்டு முடிவதிலே இன்று  நாங்கள் முடியவில்லை என்கின்றோம் !
உரக்க குரல் கொடுக்க உள்ளத்தில் உணர்வோடு நிமிர்ந்து முன்வாரும் !
முள்ளிவாய்காலில் அவன்  கொள்ளி வைத்தது ஒரு பெரு நெருப்பு
அது தமிழன் ரத்தத்தில் நின்று எரியும் ஒரு அனுமார் வால் தீ !
 
சிவலிங்கம் பிடுங்கி இங்கே புத்தர் சிலை பல முளைக்குது பார் !
கோபுரங்கள்  தகர்த்து இங்கே விகாரரைகள் இன்று தழைக்குது  பார் !
சிலுவையிலே அறைகின்றான் எங்கள்  மாவீரர் தம் கல்லறைகளை !
வெறும் உடலோடு வேடிக்கை பார்போமா இல்லை வெடிப்போமா ?
 
உறுதியோடு முன்னெடுப்பேன் என் உரிமை போர் இனி அடங்காது !
அறுத்தெறிந்து வீசிடுவோம்  அடிமைத்தனத்தை எங்கள் உளமிருந்து !
துவக்கெடுக்க சொல்லவில்லை குண்டோ வைக்க சொல்லவில்லை !
உணர்வோடு மோதிடுவோம் ! உலகோடு இணைந்து போர் தொடுப்போம் !
 
தோற்றதாக நீ நினைத்தால் நீ கோழை , தோல்விகள் படிப்பினையே!
தமிழ் தாயின் சேலை தொட்டவனை தோலுரிக்க மான உணர்வு போதும்!
இயங்காத ஒரு கூட்டம்  அது எதற்கும் உதவாத அந்த சுயநல கூட்டம் !
மயங்காதே , கலங்காதே , காலம் பதில் சொல்லும் அது வரை போராடு!
 
முள்ளிவாய்க்கால் அது எங்கள் பள்ளி! கற்று தந்த பாடங்கள் பலவுண்டு !
அதன் முடிவில் சிங்களத்தின் வெற்றி விழா, மறக்குமா தமிழா உனக்கு ?
சொல்லி அடிப்போம் இனி ஒவ்வோர் முனையிலும் சிங்கள வெறியனை!
நான் தோற்றால் என் பிள்ளை ! அடையும் வரை அடங்காது எங்கள் தாகம்!
 
முள்ளிவாய்க்கால் உறவுகளை மனதில் வைப்போம்! 
தள்ளி நிற்கும் தருணமல்ல என உணர்ந்து நிற்போம் !
கொள்ளி வைத்தவனை எரிக்கும் நெருப்பாகி எரிவோம்!
இனி இது ஒவ்வொரு தமிழனின் போர் ஆகட்டும் !
 
 



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment