Monday, June 14, 2010

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரும் வழக்கு: மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்


இந்தியா வந்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில், மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


இலங்கை பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் கடந்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியா வந்தார். இவரை கைது செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், வழக்கறிஞருமான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், 1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.


இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம்  10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.


1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.


இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கு கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் பொறுப்பேற்ற புதிய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், பொதுநலன் கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். இந்தியா வந்துள்ள டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் ஆகிய 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். 16 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்று வாதிட்டார்.


அப்போது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த வழக்கை வரும் ஜூன் 14ஆம் தேதி தள்ளி வைப்பதாகத் தெரிவித்தார். 

இந்த வழக்கு  ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய ராஜபக்சேவுடன் வெள்ளிக்கிழமை சென்று விட்டார்.


இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர். 




--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment